காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ( 05) இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான அழைப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் ஆரம்பத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றதுடன் அதனைத்தொடர்ந்து இதுவிடயமாக தெளிவு படுத்தப்பட்டபின் இக்கூட்டம் ஆரம்பமானது.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, அபிவிருத்தி திட்டங்கள் ,தோணா கால்வாய் விடயம், மத்திய கல்லூரி மதில் உடைப்பு விவகாரம், இலங்கை மின்சார சபை, ஆதார வைத்தியசாலை ,ஆயுர்வேத வைத்தியசாலை, அஸ்வசும ,சமுர்த்தி வாழ்வாதார திட்டம் ,இலங்கை போக்குவரத்து சபை தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
பண்முகப்படுத்தப்பட்ட நிதியூடாக மேற்கொள்ளப்பட்ட கட்டடங்கள், அபிவிருத்தி திட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள் தொடர்பாகவும்,சுற்றுலா படகுச்சேவை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்ப்கவும் இதன்போது அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ .எம். ஹிஸ்புழ்ழா ,பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் ,கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அப்துல்லாஹ் ,தேசிய மக்கள் சக்தி காத்தான்குடி இணைப்பளர் பிர்தௌஸ் நளீமி, நசீர், காத்தான்குடி நகர முதல்வர் எஸ். எச். எம். அஸ்பர் ,பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள்,நகர சபை செயலாளர்,நகர சபை உறுப்பினர்கள் , திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உற்பத்தித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உற்பத்தித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக,
உற்பத்தித்திறன் விழிப்புணர்வு கருத்தரங்கும் திட்ட முன்மொழிவு தொடர் நடைமுறைப்படுத்தலும்,இடமாற்றம் பெற்று புதிதாக இணைந்த உத்தியோகத்தர்களுக்கான உற்பத்தித்திறன் கலாசாரம் மற்றும் E-Productivity System அறிமுகமும், உற்பத்தித்திறன் கருவிகள், நுட்ப முறைகள் மற்றும் தரவளைய கருத்திட்டம் தொடர்பான நடைமுறைப்படுத்தலும்எனும் தலைப்புகளில் செயலமர்வு 2026.06.04 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்றது.
இச்செயலமர்வு உதவி பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. வசந்தினி குலரெத்தினம் அவர்களால் வழிநடத்தப்பட்டது. செயலமர்வில் அலுவலக மற்றும் கள உத்தியோகத்தர்கள் பங்கேற்று, உற்பத்தித்திறன் மேம்பாடு, சேவை வழங்கலில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, E-Productivity System இன் செயற்பாடு மற்றும் தரமான நிர்வாக நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும், புதிதாக இணைந்த உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகத்தில் நடைமுறையில் உள்ள உற்பத்தித்திறன் கலாசாரம், நிர்வாக ஒழுங்குகள் மற்றும் மின்னணு சேவை முகாமைத்துவ முறைகள் தொடர்பாக விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், எதிர்கால செயற்பாடுகளை மேலும் திறனுள்ளதாக முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு உத்தியோகத்தர்களின் அறிவு, திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான பயனுள்ள செயலமர்வாக அமைந்தது.




மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் சமூக சேவை திணைக்களமும் இணைந்து நடாத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பயிலுனர் விளையாட்டுப் போட்டியில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற போட்டியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு 25.05.2026 திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ. நஜிமுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத், உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம். சில்மியா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஹன்சுல் சிஹானா மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி எஸ்.எப்.ஆர். பரீட் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் அவர்களது விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவையைப் பாராட்டி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.
இந்நிகழ்விற்கு லயன்ஸ் கழகமும் காத்தான்குடி பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் அனுசரணை வழங்கியிருந்ததுடன், மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் மற்றும் சாதனைகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதேச செயலகம் – காத்தான்குடி.








"போதையற்ற ஒரு நாடு - செழிப்பான ஒரு நாளை" எனும் தலைப்பில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் நேற்று (31) காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முன்றலில் இடம்பெற்றது.
உதவிப்பிரதேச செயலாளர் எம். எஸ். சில்மியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
போதையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் எமது பிள்ளைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் காத்தான்குடி அல் அக் ஷா பள்ளிவாயல் பிரதம பேஷ் இமாம் மௌலவி எம். இல்ஹாம் (பலாஹி) நிகழ்த்தினார்.
எமது மாவட்டத்தில் போதை தடுப்பு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை பயன்படுத்தி போதை வஸ்த்து பாவனையை குறைப்பதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதேச செயலக தேசிய அபாயகர ஔடதங்கள் ஒழிப்பு உத்தியோகத்தர் திரு சந்திரகாந்தன் உரை நிகழ்த்தினார்.
உதவிப்பிரதேச சேயலாளர் தனதுரையில் கொடி தினத்தின் மூலம் கூடுதலான நிதிகளை சேகரித்து எமது பிரதேசத்தில் கல்விக்காகவும் சமூக சேவைப்பணிக்காகவும் இதை பயன்படுத்த முடியும் எனவும் தனதுரையில் தெரிவித்தார்.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி எஸ்.எப். ஆர். பரீட், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர்களான எம் .ஏ .எம் .சுல்மி, எஸ் எச் .எம். முஸம்மில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
இந்நிகழ்வில் சமுர்த்தி சமுதாய அடிப்டை அமைப்பு உறுப்பினர்களால் கொடி அணிவிக்கப்பட்டதுடன் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் அன்சார் நெறிப்படுத்தியிருந்தார். நன்றியுரையினை புதிய காத்தான்குடி வலய உதவியாளர் எம். எச். எம். அன்வர் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.






காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் திறன் மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்கனவே நடைமுறையில் காணப்பட்ட டிஜிட்டல் சேவைகள் மீளாய்வு செய்யப்பட்டு, புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இப்புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் சேவைகளின் அறிமுக நிகழ்வு கடந்த 25.05.2026 திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர்,சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரிவு தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது,
1. Front office management system.
(முன்னரங்கு அலுவலக முகாமைத்துவ முறைமை)
2. Public Portal for appointment and complaints.
(முன்பதிவு மற்றும் முறைப்பாட்டு இணையத் தளம்).
3. Inventory management system.
4. Citizen management system.
ஆகிய நான்கு இணையத் தள முறைமைகளும் புதிய வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன.
இம்முறைமைகள் ஊடாக பொதுமக்களின் தேவைகள் துரிதமாக நிறைவேற்றப்படுவதுடன், அலுவலக சேவைகள் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் தொழில்நுட்பமயமான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதேச செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) பிரிவு உத்தியோகத்தர் எம்.எம். ரசுல்ஷா அவர்களினால் தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டம் அரச சேவைகளை இலத்திரனியல் மயமாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும் கருதப்படுகின்றது.
பிரதேச செயலகம் – காத்தான்குடி
.























