பொதுசேவைகள் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் 2021.12.20 ஆந் திகதிய கடிதத்திற்கமைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2022 ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 2022.01.03 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் நிருவாகஉத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன் அவர்களது ஒழுங்கமைப்புடன் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அதற்கமைவாக 2022 புதுவருடத்தில் சமூகப் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு அரச ஊழியர்களாகிய நாம் அனைவரும் அரச வளங்களை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்து நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மனப்பாங்கினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன் இவ்வருடத்தில் பலமான நாட்டை கட்டியெழுப்புவது அரச சேவையாளர்களாகிய எம்மனைவரினதும் பொறுப்பாகும் எனவும்; சுட்டிக்காட்டப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவ வீரர்கள் உள்ளிட்ட தேசத்திற்காக உயிர்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து 02 நிமிட அமைதி அனுஸ்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரச சேவை உறுதி உரையினை பிரதேச செயலாளரால் வாசிக்கப்பட அனைத்து உத்தியோகத்தர்களாலும் மொழியப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது..அடுத்ததாக கொவிட்-19 தொற்று தொடர்பாக தனிநபர் பொறுப்பும் சமூக பொறுப்பு எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளரின் உரை இடம்பெற்றது.தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாகத்திற்கான வைத்திய அதிகாரி மதிப்பிற்குரிய னுசு.ஆர்.நவலோஜிதன் அவர்களால் சுற்று நிருபத்திற்கமைவாக கொவிட் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஒவ்வொருவருக்கும் சமூகத்திலும் அலுவலக சூழலிலும் உள்ள பொறுப்புக்களை வலியுறுத்தும் வகையில் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கணக்காளர் செல்வி.கே.சித்திரா, உதவிப் பிரதேசசெயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.என்.கிருஸ்ணப்பிரியன் மற்றும்சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் ஆகியோரின் உரை இடம்பெற்றது.அடுத்து இலங்கை சமூகபாதுகாப்பு ஓய்வூதியத்திட்டத்தின் 2021 ஆண்டு இலக்குகளை குறுகிய காலப்பகுதியில் அடைந்து கொள்வதற்காக அர்ப்பணிப்பான பங்களிப்புக்களை செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எஸ்.எம்.எம்.றபீக், திருமதி.எம்.ஜ.எஸ்.ஜஸ்மின், திருமதி.ஏ.ஆர்.அனிஸா, மற்றும் விடய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.எம்.எம்.எவ்.முபஸ்ஸறா ஆகியோருக்கு பிரதேச செயலாளரால் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.பிரணவசோதி, உட்பட கிராம உத்தியோகத்தர்கள், சகல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் திரு.றசூல்சா அபிவிருத்தி உததியோகத்தர் அவர்களும் நிகழ்ச்சிகளை இணைந்து தொகுத்து வழங்கியிருந்தார்.


















