ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவும், “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் “ஒற்றுமையாக ஒன்றிணைவோம் – தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளின் அடிப்படையிலும் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் தேசிய தூய்மை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வு புதிய காத்தான்குடி வடக்கு 167A கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மெளஜூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இத்தூய்மை வேலைத்திட்டத்தின் போது கடற்கரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன், கால்வாய் ஓரங்களில் காணப்பட்ட கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், வீதி ஓரங்களில் அடர்ந்து காணப்பட்ட புற்கள் வெட்டி அகற்றப்பட்டு, சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் காத்தான்குடி “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் இணைப்பாளருமான எம்.பி.எம். பிர்தெளஸ் நழீமி, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பினர், இலங்கை விமானப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரப் பரிசோதகர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இத்தேசிய தூய்மை வேலைத்திட்டம் ஒரே நாளில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பல்வேறு தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கால்வாய்கள், வீதி ஓரங்கள், பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பகுதிகளை சுத்தப்படுத்துதல், குப்பைக் கழிவுகளை அகற்றுதல், அடர்ந்து காணப்படும் புற்கள் மற்றும் புதர்களை அகற்றுதல் போன்ற பணிகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவதும், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது இடங்களைப் பேணிப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அரச நிறுவனங்கள், பாதுகாப்புத் துறையினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் தூய்மையானதும் அழகானதுமான காத்தான்குடியை உருவாக்க முடியும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.








காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி, பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் அவர்களின் தலைமையில் அதிகாரசபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச அதிகாரசபையின் செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள்மற்றும் அதிகாரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கலை, கலாசார மற்றும் சமூக நடவடிக்கைகள் தொடர்பிலும், அவற்றை மேலும் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், பிரதேசத்தின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் அவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அதிகாரசபையின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதுடன், பிரதேசத்தின் கலை, கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாத்து அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.






காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு 2026.07.21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்ற இச்செயலமர்வில் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் Dr. A.L.முகமட் றிப்கி அவர்கள் வளவாளராக (Resource Person) கலந்து கொண்டு, நவீன பொதியிடல் முறைகள், பொருட்களின் தர மேம்பாடு, பொதியமைப்பின் முக்கியத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
உள்ளூர் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் தரத்தையும் சந்தைப்படுத்தல் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், பொருட்களின் பொதியிடல் முறைகள், கவர்ச்சிகரமான பொதியமைப்பு, தரநிலைகள், பெயரிடல் (Labelling), வர்த்தகப் பெறுமதி உயர்த்தும் உத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. S. வினோத், காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பயனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பொதியிடல் தொடர்பான நவீன நடைமுறைகள் மற்றும் சந்தைத் தேவைகள் குறித்து பயனுள்ள அறிவைப் பெற்றுக்கொண்டனர்.





ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜின் தலைமையில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலா ரத்ன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் இணைப்பாக்கத்தில் காத்தான்குடியில் இன்று இடம் பெற்றது.
சர்வதேச போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் கொண்ட ஸ்டிக்கர்கள் முற்சக்கர வாகனங்களில் அதிதிகளினால் ஓட்டப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் இதன் போது மக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் “விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்” – அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக் கொண்ட துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு இதன் போது வழங்கப்பட்டன.
மார்ச் மாதம் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல்” திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பொலிசாருடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டது.
எமது நாட்டின் வளமான மாணவர்கள், இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை 1818 எனும் இலக்கத்தினூடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






















